Custom Search

30.5.11

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்


உலக புகையிலை எதிர்ப்பு நாள் (ANTI TOBACCO DAY) உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம்ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5மில்லியன்இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

26.5.11

நியூட்டனின் (காதல்) விதி...

யுனிவர்சல் விதி :
காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.மாறாக அது ஒரு பெண்ணிடமிருந்து மற்றோர் பெண்னைக் கண்டு மாறும்.

முதல் விதி :
ஒரு பையனின் பெண் மீதான காதல் ஆனது, தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஒரு வெளிப்புற விசை (அந்த பெண்ணின் அண்ணன் அல்லது அப்பா) வந்து அப் பையனின் கை கால்களை உடைக்காதவரை..


இரண்டாம் விதி :
ஒரு பெண்ணின் காதலானது தான் காதலிக்கும் பையனின் வங்கிக் கணக்கிற்கு நேர்மாறாகவும்,அதே சமயத்தில் வங்கிக் கணக்கின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற படி குறையும்.

மூன்றாம் விதி :
நாம் எப்படி ஒருவர(ன)து தங்கையை காதலித்தோமோ அதைப் போல நம் தங்கையையும் ஒருவன்(ர்) காதலிப்பான்(ர்).

இதெல்லாம் எழுதனும்னு என்னோட விதி...
அத படிக்கனும்னு உங்க தல விதி..

24.5.11

சிரி. சிரி.. சிரி...


வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். 
அது என்னைக்கு? 
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? 
குன்னக்குடி-வயலினிஸ்ட்! 
காந்திஜி-non வயலினிஸ்ட்!!

தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? 
தெரியவில்லையே 
திரவப்பொருள்!' 
அதெப்படி? 
கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! 
ஏன் அப்படி சொல்றே? 
மயிலுக்கு தமிழ் தெரியாதே!

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி 
நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. 
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? 
ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? 
நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... 
எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? 
அது 'ஈஸி' சேராச்சே!

உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? 
படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...?
 தெரியலையே.... என்னது? 
தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? 
எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? 
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... 

என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... 
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

ஆயுத விற்பனை விளம்பரம்


பிரான்ஸ் TF1 தொலைக்காட்சி செய்தியை தற்செயலாக பார்த்தவர்கள், அந்த மாபெரும் உண்மையை அறிந்து திகைத்திருப்பார்கள். லிபியாவில் நடக்கும் போர் குறித்த செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதல் விபரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். "லிபியாவில் நடக்கும் போரினால் எமது ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் புதிதாக வாங்கிய விமானங்களின் தாக்குதிறனை பரீட்சிப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம். எமது விமானிகளுக்கும் போர்க்களத்தில் நேரடிப் பயிற்சி கொடுக்க முடிகிறது." தற்செயலாக, ஒரு தடவை மட்டுமே அந்த அதிகாரியின் நேர்காணல் ஒளிபரப்பானது. விழித்துக் கொண்ட பிரெஞ்சு அரசு, அவசரமாக விடுத்த வேண்டுகோளின் பின்னர் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது. மேலைத்தேய "மனிதாபிமான" அரசுகள், கடாபி என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையில் இருந்து, லிபிய மக்களை காப்பாற்றுவதற்காகவே, குண்டு போடுவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட நவீன ஆயுதங்களை சந்தையில் விற்பதற்காகத் தான், லிபியா மீது போர் தொடுக்கப் பட்டது. இந்த உண்மையை மக்கள் அறிந்துகொண்டால், கற்பிக்கப்பட்ட நியாயம் அடிபட்டுப் போகாதா? மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமான முகமூடி கிழிவதை பொறுத்துக் கொள்ளலாமா? ஆயிரம் காரணம் சொல்லுங்கள். உலகில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி ஆயுதங்கள் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா?


சாதாரணமாக எவரும் விக்கிபீடியா, கூகிளில் தேடிப் பெறக் கூடிய தகவல் இது. ரஷ்யாவை தவிர்த்தால், அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் முதல் ஐந்து நாடுகள் மேற்குலகில் இருக்கின்றன. உலகில் ஆயுத உற்பத்தியில் முன்னணியில் நிற்பது, வேறு யார்? அமெரிக்கா தான். உலகில் 30 சதவீத ஆயுதங்கள் அமெரிக்க தயாரிப்புகள் தான். அவை தான் அதிகளவில் விற்பனையாகின்றன. பனிப்போர் முடிந்து இருபதாண்டுகளுக்கு மேலானாலும், இன்றைக்கும் ரஷ்யா தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை தயாரிக்கிறது. (23 %) அதற்கு அடுத்ததாக ஜெர்மனி (11 %), பிரான்ஸ் (7 %), பிரிட்டன் (4 %), நெதர்லாந்து (3 %). இவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மனித உரிமைகள், போர்க்குற்றம் பற்றி விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், ஆயுதங்களை விற்று கொலைகாரர்களை ஊக்குவிக்கிறார்கள். எல்லாமே பணத்துக்காகத் தான். எங்கேயோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் தானே, முதலாம் உலக மக்கள் செல்வந்த வாழ்வு வாழலாம்? இனப்படுகொலை, போர்க்குற்றம், எது நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆயுதங்களை விற்றோமா, இலாபம் சம்பாதித்தோமா, அது தான் முக்கியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பணக்கார நாடுகளாக அவர்களால் நிலைத்து நிற்க முடியுமா? ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்.

எங்களால் நம்ப முடியாது. ஆனால் இது தான் உலக யதார்த்தம். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் செயல்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். எங்காவது ஒரு நாட்டில் போர் நடந்ததால் தானே, புதிய ஆயுதங்களை பரீட்சித்துப் பார்க்க முடியும்? அவை எத்தனை மக்களின் உயிரைக் குடிக்கும், எத்தனை சொத்துகளை நாசமாக்கும், என்றெல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டாமா? உதாரணத்திற்கு ஐரோப்பியரின் புதிய தயாரிப்பான Eurofighter Typhoon விமானத்தை எடுத்துக் கொள்வோம். அதன் இணையத்தளத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்கிறார்கள். "The world's most advanced new generation multi-role/swing-role combat aircraft available on the market." சும்மா விளம்பரம் செய்து விட்டால் போதுமா? இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பாவிக்கப்படாத போர்விமானத்தை எவன் வாங்குவான்? தற்போது லிபியா மீது நேட்டோ படைகள் நடத்தும் தாக்குதல்களில், அந்த விமானங்கள் ஈடுபடுத்தப் படுகின்றன. Eurofighter விமானங்களின் தாக்குதிறன் குறித்த விபரங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து மகிழலாம். சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாம் இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சில முக்கிய வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, பிரேசில், குரோவாசியா... இன்னும் பல நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவதற்காக ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆயுதங்களை பாவிக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக கண்டுபிடித்த Prompt Global Strike, அதே அளவு தாக்குதிறனைக் கொண்ட, மரபு வழிப் போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதம். அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில், உலகின் எந்தப் பாகத்திலும் சென்று வெடிக்கக் கூடியது. செய்மதி அந்த ஆயுதத்தை இலக்கு நோக்கி வழிநடத்தும். ஆனால், அந்த ஆயுதம் சந்தைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் அமெரிக்காவின் Prompt Global Strike நிகழ்த்தப் போகும் அற்புதங்களைக் காண தயாராகுங்கள். ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தது இதற்காகத் தானா?

இன்று நேற்றல்ல, கடந்த எழுபதாண்டுகளாக போர்க்காலத்தில் தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கின்றது. 1937 ம் ஆண்டு, ஸ்பானியாவில் குவேர்னிகா நகரம் ஜெர்மன் விமானங்களின் குண்டுவீச்சில் அழிக்கப் பட்டது. பிரான்கோவின் பாஸிச படைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முதல் நடந்த போர் அது. பிற்காலத்தில் போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஸி அரசின் மந்திரி கேரிங் இவ்வாறு கூறினார்:"புதிதாக அமைக்கப்பட்ட எங்களது விமானப்படையினதும், விமானிகளினதும் முதலாவது போர்க்கள அனுபவம்." நாஸி ஜெர்மனி சொல்லிக் கொடுத்த பாடத்தை அமெரிக்கர்கள் வியட்னாம் போரில் பின்பற்றினார்கள். BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, "Daisy Cutter " என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்தக் குண்டு, வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப்பட்ட இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் இறங்குமளவிற்கு இடம் கிடைத்து விடுமாம். டெய்சி கட்டர் குண்டுவீச்சினால் பரவிய காட்டுத்தீயில், அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர். சீறிப் பாய்ந்த தீச் சுவாலைகள் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப் பற்றி யாருக்கு கவலை? ஹெலிகாப்டர் தரையிரங்குமளவு இடம் கிடைத்ததல்லவா? அது அல்லவா வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?

குவைத் மீட்பதற்கு நடந்த முதலாவது வளைகுடா போரில், "Bunker Buster " குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. சதாம் ஹுசைனின் நிலக்கீழ் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவப்பட்டன. பின்னர் ஆப்கான் போரில், அல்கைதா/தாலிபான் தலைவர்கள் பதுங்கியிருந்த குகைகளை தகர்க்க பயன்படுத்தப் பட்டன. ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்களால் தாலிபானை அழிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். Thermobaric (வெப்ப அமுக்க) குண்டுகள், விழுந்த இடத்தில் பிராணவாயுவை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உள் உடல் உறுப்புகள் யாவும் பாதிக்கப்படும். பிரித்தானியா கண்டுபிடித்துள்ள Light weight anti -structure missiles சுவரை துளைத்துச் சென்று உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. XM25 Individual Airburst Weapon System (IAWS), இதுவும் சந்தையில் புதிதாக வந்துள்ள அமெரிக்க ஆயுதம் தான். இது ஒரு சாதாரணமான கிரனேட் வீசு கருவி. ஆயினும் லேசரால் தூரத்தை அளந்து, கிரனேட் குறிப்பிட்ட இலக்கின் மீது விழுந்து வெடிக்க வைக்கலாம். இந்த புதிய ஆயுதங்களை வாங்கி பாவிக்க விரும்புகிறீர்களா? உடனடியாக ஒபாமாவை தொடர்பு கொள்ளவும். வாங்குபவர் ஏதாவது ஒரு அரசாங்க சார்பாக தொடர்பு கொள்வது விரும்பத் தக்கது. அரசுகளுடன் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் பேசுவார்களாம். கறுப்புச் சந்தையில் ஆயுதம் விற்கும் சில்லறை வியாபாரிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்களை அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது பெரிய முதலாளிகள், சில்லறை முதலாளிகளை பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

23.5.11

தேசிய விருது! என்கிற கேலிக்கூத்து....


யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி. சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம்.

மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது. படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள். 

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது. களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார். 

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம். இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு.

அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம். அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா.

இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை. பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார்.

படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான். இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். 

இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது. 

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது. உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?

ஸ்ரீசாந்த் ஜோக்ஸ்

பெட்டிங் கட்டுபவர்: ஒருத்தன் கூட ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பான்னு பெட்டு கட்ட மாட்டேங்கிறானுங்களே...இப்படியே போனா கம்பெனி நஷ்டத்தில் போய்விடுமே!

***********

கங்குலி: வாப்பா ஸ்ரீசாந்த் இப்படி பக்கத்துல உட்காரு...

ஸ்ரீசாந்த்: என்ன அண்ணே ரொம்ப பாசமா கூப்பிடுறீங்க?

கங்குலி: எப்படியும் அடுத்த IPLல் எனக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் அதான் இப்பவே சீட் ரிசர்வ் செஞ்சி வைக்கிறேன்...

*********

பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.

புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.

********

ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!

கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.

ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...

கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.

ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.

19.5.11

உலகையை அசத்திக் கொண்டிருக்கும் புத்தம் புதிய விளையாட்டு

கணணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் விடுபட கணணியில் விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம்.
இன்னும் வீட்டில் இருக்கிற சுட்டிகளுக்கு கணணியில் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள். அந்த அளவிற்கு கணணியில் விளையாடி கொண்டு இருப்பர்.
விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள். இந்த வரிசையில் இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு.
தன்னுடைய முட்டைகளை திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் லட்சியம். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முதலில் உங்கள் கணணியில் கட்டாயம் கூகுள் குரோம் உலவியை நிறுவி இருக்க வேண்டும்.
கூகுள் குரோம் உலாவியை ஓபன் செய்து கொண்டு இந்த லிங்கில்https://chrome.google.com/webstore செல்லுங்கள்.
இதன் பிறகு தோன்றும் விண்டோவில் Install என்பதை க்ளிக் செய்தால் Angry Birds விளையாட்டு உங்கள் கணணியில் சேர்ந்து விடும்.

இனி உங்கள் குரோம் உலவியில் Newtab க்ளிக் செய்தால் இந்த விளையாட்டு சேர்ந்து இருக்கும். அதில் க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் உலவியில் நீங்கள் இலவசமாக விளையாடி கொள்ளலாம்.


இந்த லிங்கில் http://chrome.angrybirds.com/  க்ளிக் செய்தும் இதனை விளையாடி மகிழலாம்

17.5.11

சிரிக்க மட்டும்...

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
------------------------------------------------------------------------
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!
------------------------------------------------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------------------------------------------------
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
------------------------------------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

14.5.11

பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது


மிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.
இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.
தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.
இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.
இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை.
மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

அதிகம் விரும்பப்பட்ட பதிவுகள்