தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணித்த எக்சிட் போல் கணிப்புகள் கூட இந்த பிரம்மாண்ட வெற்றியை கணிக்க முடியவில்லை. இதுவரை எங்கள் கணிப்புதான் தமிழக தேர்தல் முடிவுகளோடு ஒத்துப் போனது என்று மார்தட்டிய நக்கீரன் பத்திரிகை இப்போது மூக்குடைபட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழக மக்களின் முடிவுகளை துல்லியமாக எவராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பொதுவில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பதை பொதுமக்கள் முதல் பத்திரிகையாளர்கள், சில பதிவர்கள் வரை பேசி வந்தனர். அவர்களும் கூட இந்த அளவு வெற்றியை கணித்திருக்கவில்லை.
இதில் என்.டி.டி.வி ஹிண்டு நிருபர் ஒருவர் டெல்லியில் நடந்த அண்ணா ஹாசாரே போராட்டம் தமிழக வாக்காளர்களின் ஜனநாயக கடமையை எழுப்பி விட்டிருக்கும் என்று கூறினார். இனி இது போன்ற அபத்தங்கள் பல முனைகளிலிருந்தும் வரும். ஜெயலலிதாவின் வெற்றியை சிலாகித்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் குவியலாம்.
தமிழகத்தில் நடந்த அதிக வாக்குப்பதிவு, முதல் முறை வாக்களிப்பவர்கள், விலைவாசி உயர்வு, மின்தடை என்று பல காரணங்களால், அ.தி.மு.க இந்த பெரு வெற்றியை பெற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் பலரும் கருணாநிதி குடும்ப ஆட்சி கொள்ளையை மட்டும் முக்கிய பிரச்சினையாக பார்த்திருந்தனர். ஆனால் உள்ளூர் அளவில் பல அமைச்சர்களும், தலைவர்களும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் முழு வீச்சில் கொள்ளையடித்தது, ஐந்தாண்டுகளுக்குள் ஏகப்பட்ட பினாமி தொழில்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கியது என்று முழு தமிழகத்திலும் தி.மு.க கும்பல் மக்களிடையே மிகுந்த கெட்ட பெயரை சம்பாதித்திருந்தது.
இலவசங்கள், காப்பீட்டு திட்டம் போன்ற சலுகைகளை விட விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தது. வருமானம் உயர்ந்திருப்பதால் விலைவாசியெல்லாம் பிரச்சினையில்லை என்று தி.மு.க அமைச்சர்கள் திமிராக பேசிவந்தனர். அதே போல கல்வி கட்டண உயர்வு, சுயநிதிக் கல்லூரி கட்டணக் கொள்ளை போன்றவை காரணமாக நடுத்தர வர்க்கமும் இந்த ஆட்சி மீது வெறுப்புற்றிருந்தது. சன்.டி.வி, கலைஞர் டி.வி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி இவர்களது ஏகபோகத்தால் சிறைபட்டிருந்த சினிமா உலகிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.
இத்தகைய கடும் மக்கள் விரோத அரசாங்கத்தை தூக்கியெறிய வைக்குமளவுக்கு இங்கே அ.தி.மு.க எந்த போர்க்குணமிக்க போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அடையாள போராட்டங்களை நடத்தி விட்டு, அம்மா தரும் அறிக்கைகளை வைத்தே அந்தக் கட்சி செயல்பட்டு வந்தது. இதில் முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டில் ஓய்விலிருந்த ஜெயலலிதாவின் ‘திறமை, அர்ப்பணிப்பு’ காரணமாக இந்த வெற்றி கிடைக்க வில்லை.
மொத்தத்தில் பிசாசு ஆட்சி அகன்று, பேயாட்சி வந்திருக்கிறது. அதையும் தமிழக மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக